பாரத் டாக்சி செயலிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு
மத்திய அரசின் பாரத் டாக்சி செயலி, பொதுமக்களிடையே மிகுந்த ஆதரவைப் பெற்றுள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அதன் சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஓலா, ஊபர், ராபிடோ போன்ற தனியார் டாக்சி சேவைகளுக்கு மாற்றாக, மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாரத் டாக்சி செயலியை உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இந்த செயலியில் ஓட்டுநர்களிடம் எந்தவித கமிஷனும் வசூலிக்கப்படுவதில்லை. பயணிகள் செலுத்தும் முழுத் தொகையும் நேரடியாக ஓட்டுநர்களுக்கே வழங்கப்படும் என்பதே இந்த செயலியின் முக்கிய சிறப்பாகும். இதன் காரணமாகவே பாரத் டாக்சி செயலி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போதுவரை நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், தினமும் சுமார் 45 ஆயிரம் புதிய பயனர்கள் இதை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் ஒன்பதாவது இடத்தையும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதின்மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ள பாரத் டாக்சி செயலியை, சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.