திருப்பரங்குன்றம் தீர்ப்பு: “மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” – அண்ணாமலை கருத்து
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, தமிழக திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆண்டிற்கு ஒருமுறை மட்டும், கோவில் நிர்வாகம் மற்றும் முருக பக்தர்கள் இணைந்து தீபத்தூணில் தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற திமுக அரசின் வாதத்தை நீதிமன்றம் முற்றாக நிராகரித்துள்ளதாகவும், அத்தகைய பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால், அது திட்டமிட்ட வகையில் அரசே உருவாக்கினால் மட்டுமே நிகழும் என நீதிமன்றம் கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத்தூண் முழுமையாக கோவிலுக்குச் சொந்தமானது என்பதையும் சென்னை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டார்.
சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் சமூகத்தில் பிளவுகளை உருவாக்கும் வகையில் திமுக அரசும், அரசு அதிகாரிகளும் மேற்கொள்ளும் தன்னிச்சையான செயல்பாடுகள் மிகுந்த அபாயத்தை ஏற்படுத்துவதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக இவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் நீதிமன்றம் திமுக அரசை எச்சரித்துள்ளதாக தெரிவித்தார்.
எனவே, திமுக அரசு இனியாவது அதிகார துஷ்பிரயோகத்தை கைவிட்டு, உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மதித்து, முருக பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார்.