சென்னை மயிலாப்பூரில் பெண் போக்குவரத்து காவலரை தாக்கிய மதுபோதைய இளைஞர்கள் – 4 பேர் கைது
சென்னை மயிலாப்பூர் பகுதியில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் ஒன்-வே பாதையில் சென்ற நபர்களை தடுத்து நிறுத்திய பெண் காவலரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த ஐந்து மாதங்களாக போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் நந்தினி (28). நேற்று அவர், மயிலாப்பூர் ஆர்.கே. சாலை – ஜம்புலிங்கம் தெரு சந்திப்புப் பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, நான்கு இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில், மது அருந்திய நிலையில் எதிர்திசையில் (ஒன்-வே) வந்துள்ளனர். இதை கவனித்த பெண் காவலர் நந்தினி, அவர்களை தடுத்து நிறுத்தி, விதிமீறல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நால்வரில் ஒருவர், தனது கூட்டாளியுடன் சேர்ந்து வாகனத்திலிருந்து கீழே இறங்கி, பெண் காவலரின் கையை பிடித்து இழுத்து பின்னால் முறுக்கி தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெண் காவலர் கூச்சலிட்டதையடுத்து அருகிலிருந்த பொதுமக்கள் விரைந்து வந்து உதவி செய்தனர். அவர்களின் உதவியுடன் இருவரை காவலர் பிடித்தார். ஆனால், மற்ற இருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
பிடிபட்ட பெருமாள் மற்றும் பிரேம்குமார் ஆகிய இருவரை மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தப்பியோடியவர்கள் ஜீவா மற்றும் சீனிவாசன் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, பெருமாள் மற்றும் பிரேம்குமார் அளித்த தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு, ஜீவா மற்றும் சீனிவாசனை அவர்களது வீடுகளில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஜீவாவின் தம்பி ஆகாஷ் என்பவருடையது என்பதும் தெரியவந்துள்ளது.
விசாரணையில், திருவல்லிக்கேணி முத்தையா தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (28), மயிலாப்பூர் சண்முகம் பிள்ளை தெருவைச் சேர்ந்த பிரேம்குமார் (28), ராயப்பேட்டையைச் சேர்ந்த ஜீவா (23) மற்றும் கருப்பன் என்ற சீனிவாசன் (27) ஆகியோர் இந்த தாக்குதலில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது.
மேலும், பெருமாள், பிரேம்குமார் மற்றும் ஜீவா மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
பெண் காவலரை தாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.