திருப்பரங்குன்றம் விவகாரம்: வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு, உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என இந்து முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக முருக பக்தர்கள் மேற்கொண்ட பிரார்த்தனைகள் நிறைவேறியுள்ளன என்றும், திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு மிகவும் பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கில் காவல்துறை மற்றும் அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதாகவும், தீபத்தூணில் தீபம் ஏற்றும் பணிகளை கோயில் தேவஸ்தான நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் ராஜேஷ் தெரிவித்தார்.
மேலும், தீபம் ஏற்றும் விவகாரத்தில் எந்தவிதமான மோதலும் ஏற்படக்கூடாது என இருதரப்பினருக்கும் நீதிபதிகள் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக கூறினார்.
இந்த வழக்கில் அரசின் செயல்பாடுகள் மக்களிடையே பிளவை உருவாக்கும் வகையில் இருந்ததாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், தமிழக சட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க தீர்ப்புகளில் ஒன்றாக இது இடம் பெறும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.