சித்த மருத்துவ தினம்: சென்னை அரும்பாக்கத்தில் வாக்கத்தான் மற்றும் மருத்துவ முகாம்
சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, சென்னை அரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் ஏற்பாட்டில் வாக்கத்தான் ஓட்டப்பந்தயமும், சிறப்பு மருத்துவ சேவை முகாமும் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் 200-க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். வாக்கத்தான் போட்டியை மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சித்த மருத்துவ ஆலோசனை இயக்குநர் டாக்டர் முத்துக்குமார் மற்றும் இணை இயக்குநர் கோமளவள்ளி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் முத்துக்குமார், சித்த மருத்துவத்தின் சிறப்புகளை உலகளவில் பரப்ப மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும், இந்தியா முழுவதும் சித்த மருத்துவத்திற்கு 9 பிரிவுகள் செயல்பட்டு வருவதாகவும், லட்சக்கணக்கான மக்கள் இந்த மருத்துவ முறையின் மூலம் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.