தேர்தல் தோல்வி அச்சம் காரணமாகவே முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவிருக்கும் தேர்தலில் தோல்வி உறுதியானதால், அதற்கான அச்சமும் நடுக்கமும் ஏற்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அன்பு நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருப்பரங்குன்றம் தொடர்பாக நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை தாம் வரவேற்பதாகக் கூறினார். பொதுமக்கள் சார்ந்த பிரச்சினைக்கு நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும், அதனை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தி மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் விமர்சித்தார்.
மேலும், விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான கூட்டணியாக உருவெடுக்கும் என்றும், 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் கூறி வருவதை சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், மத்திய அரசு அந்த திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியுள்ளதாகவும், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 125 நாள் வேலை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார். திமுக தேர்தல் வாக்குறுதியில் 150 நாள் வேலை வழங்குவோம் என அறிவித்திருந்தாலும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், 100 நாள் வேலைத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், வேலை செய்யாமலேயே சம்பளம் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இனி அத்தகைய நடைமுறைகள் தொடராது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தாலும், அந்த திட்டத்தில் இன்னும் பல குழப்பங்கள் நீடித்து வருவதாகவும், ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்தாலும், அவர்கள் செலுத்திய தொகை அவர்களுக்கே கிடைக்குமா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் கூறினார்.
திமுக அரசு ஊழலில் மட்டுமல்ல, குடும்ப அரசியலிலும் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய நயினார் நாகேந்திரன், உதயநிதி ஸ்டாலினை முதல்வராக மாற்றுவதற்காக எந்த எல்லைக்கும் ஸ்டாலின் செல்லத் தயங்கமாட்டார் என்றும் விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடரும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும், அமைச்சரவையில் இடம் கேட்கும் தகவல்கள் வெளியாகி வருவதாகவும் கூறினார்.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கப்படாத நிலையில், தேர்தலை முன்னிட்டு இந்த ஆண்டு ரூ.3000 அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது மக்கள் நலனுக்காக அல்ல, அரசியல் நோக்கத்திற்காகவே என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழக முழுவதும் கனிம வள கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், ராதாபுரம், தென்காசி, செங்கோட்டை, கன்னியாகுமரி, கோவை–பாலக்காடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் கனிம வளங்களை கேரளாவுக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தடுக்க முடியாமல் திமுக அரசு செயல்படுகிறது என்றும், தமிழகத்திலிருந்து கனிம வளங்களும் பால் உள்ளிட்ட பொருட்களும் கேரளாவுக்கு செல்லும் நிலையில், அங்கிருந்து கழிவுகள் மட்டும் தமிழகத்தில் கொட்டப்படுவது வழக்கமாகி விட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
இந்த நிலையை தமிழக முதலமைச்சர் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாகக் கூறிய நயினார் நாகேந்திரன், முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி பயம் மட்டுமல்ல, தோல்வி நடுக்கமும் வந்துவிட்டதாக கடுமையாக விமர்சித்தார்