நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது: இபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கையில் திமுக அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி (இபிஎஸ்) குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வடுவூர், அடிச்சேரி, செருமங்கலம் ஆகிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இபிஎஸ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சம்பா சாகுபடி வயல்களையும் பார்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“நான் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பல நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டேன். எங்கும் ஒரே நிலை — கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மூட்டைகள் குடோன்களுக்கு எடுத்துச் செல்லப்படாமல் அங்கேயே தேங்கி கிடக்கின்றன. பல மூட்டைகள் மழையில் நனைந்து, நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.
விவசாயிகள் விற்பனை செய்ய காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமலே குவிந்து கிடக்கின்றன. இது மிகப் பெரிய நிர்வாகப் பிழை.
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரு நாளுக்கு 1,000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டு, உடனடியாக பணம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டன. ஆனால் தற்போது, திமுக அரசு பணிமுறைகள் சரியாக இல்லாமல் விவசாயிகளை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
லாரிகள் வருவதில்லை, டீசல் செலவுக்குப் பணம் தரப்படவில்லை என்று சுமைப்பணி தொழிலாளர்கள் கூறுகிறார்கள். இதனால் கொள்முதல் செயல்முறை முழுவதும் சீர்குலைந்துள்ளது.”
அவர் மேலும் கூறியதாவது:
“டெல்டா மாவட்டங்களில் சுமார் 30 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளன. அவற்றில் பலவும் முளைத்து வீணாகிவிட்டன. எனவே, நெல் கொள்முதல் விவகாரத்தில் திமுக அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட பயிர் நிலைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விரைவாக இயக்கம் செய்யவும், இன்னும் கொள்முதல் செய்யப்படாதவற்றை உடனடியாக வாங்கும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.
இந்த விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்வதில்லை; விவசாயிகளின் நலனுக்காகவே பேசுகிறோம். அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்,” என இபிஎஸ் வலியுறுத்தினார்.