ஆளுநரிடம் எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு விவரங்கள்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களிடம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சமர்ப்பித்துள்ள திமுக அமைச்சர்கள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வெளியாகியுள்ளன.
அந்த பட்டியலில், நகராட்சி நிர்வாகத் துறையில் மட்டும் சுமார் 64 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், சுரங்கம் மற்றும் கனிம வளத் துறையில் 60 ஆயிரம் கோடி ரூபாய், டாஸ்மாக் நிர்வாகத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி துறையில் 60 ஆயிரம் கோடி ரூபாயும், எரிசக்தி துறையில் 55 கோடி ரூபாயும், பத்திரப்பதிவு துறையில் 20 கோடி ரூபாய் மதிப்பிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறையில் 20 ஆயிரம் கோடி ரூபாய், நீர்வளத் துறையில் 17 ஆயிரம் கோடி ரூபாய், சென்னை மாநகராட்சியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையில் 8 ஆயிரம் கோடி ரூபாய், சமூக நலத்துறையில் 4,500 கோடி ரூபாய், உயர்கல்வித் துறையில் 1,500 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், பள்ளிக்கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் வேளாண்மை ஆகிய மூன்று துறைகளிலும் தலா 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ஆதி திராவிடர் நலத் துறையில் தலா 1,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் துறையில் 750 கோடி ரூபாய், விளையாட்டுத் துறை மற்றும் சிறைத்துறையில் தலா 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
மேலும், சுற்றுலாத் துறை மற்றும் பால்வளத் துறைகளில் தலா 250 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.