திமுக எம்.பி கதிர் ஆனந்த் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட கணக்கில் பதிவாகாத பணம் தொடர்பான வழக்கு விசாரணை, அடுத்த மாதம் 3ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
கதிர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, உரிய கணக்குகளில் இடம்பெறாத 10 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், கதிர் ஆனந்திற்கு நெருங்கியவராக கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசன் என்பவரிடமிருந்து சுமார் 11 கோடி ரூபாய் அளவிலான பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்காக கதிர் ஆனந்த் உள்ளிட்ட தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.