திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட வேண்டும் – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு தொடரும்
திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை, உயர்நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்துள்ளது. இதன் மூலம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு முழுமையாக நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கோயில் நிர்வாகம் கட்டாயமாக தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் நேரடியாக கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
அரசியல் நோக்கங்களுக்காக எந்த மாநில அரசும் இவ்வளவு தாழ்ந்த நிலைக்கு செல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என நீதிபதிகள் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறையை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற அரசுத் தரப்பு வாதம், அதிகாரிகள் தங்கள் வசதிக்காக உருவாக்கிய கற்பனையே தவிர உண்மையல்ல எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாளின் போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.