20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திமுக – புதிய அணை ஒன்றையும் அமைக்கவில்லை : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
தமிழகத்தில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் உதவி பெற்று வந்த விவசாயிகளின் எண்ணிக்கை, 40 லட்சத்திலிருந்து 20 லட்சமாக சரிந்ததற்கு மாநில அரசின் செயல்பாடுகளே காரணம் என மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை மாநாட்டில் பங்கேற்ற அவர், பின்னர் உரையாற்றினார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் அடித்தளமாக இருப்பதாக கூறினார். குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே பிரதமரின் முக்கிய நோக்கம் என்றும், அதற்காக எந்த அளவிலான முயற்சியையும் மேற்கொள்ள அவர் தயங்குவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மாநிலத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என விமர்சித்த அவர், கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக அரசு ஒரு புதிய அணையைக் கூட அமைக்கவில்லை என குற்றம் சாட்டினார்.