பொங்கல் பரிசுத் தொகையை ரூ.8,000 ஆக உயர்த்த வேண்டும் – தமிழக பாஜக வலியுறுத்தல்
தமிழகத்தில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகையை ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வளங்களை சுரண்டி கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்படும் திமுக அரசு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை ஏமாற்றும் நோக்கில் ரூ.3,000 மட்டுமே பொங்கல் ரொக்கப் பரிசாக வழங்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பொங்கல் பரிசுத் தொகை ரூ.5,000 ஐ, தற்போதைய பொங்கல் பொருள் தொகுப்புடன் சேர்த்து, மொத்தம் ரூ.8,000 ரொக்கமாக வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடுதலாக ரூ.2,500 ரொக்கமாக வழங்கப்பட்டதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
ஆனால் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பொங்கல் பரிசாக ரூ.1,000 மட்டும் வழங்கப்பட்டதாகவும், 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு எந்தவிதமான ரொக்கப் பரிசும் வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
2022 முதல் 2025 வரை தமிழக மக்களுக்கு வழங்க வேண்டிய பொங்கல் பரிசுத் தொகையில் இருந்து ரூ.8,000 ஐ மறைத்துவிட்டு, 2026 தேர்தலை முன்னிட்டு ரூ.3,000 வழங்குவது போல் நடித்து மக்களின் வாக்குகளைப் பெற திமுக அரசு நாடகம் நடத்துகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
திமுக அரசு பதவியேற்றவுடன், 2021 இல் அதிமுக அரசு வழங்கிய அளவிலேயே பொங்கல் பரிசுத் தொகையை வழங்கியிருக்க வேண்டிய நிலையில், வழங்காமல் விட்ட ரூ.5,000 மற்றும் தற்போதைய அறிவிக்கப்பட்ட ரூ.3,000 ஆகியவற்றை சேர்த்து, தமிழக மக்களுக்கு ரூ.8,000 பொங்கல் பரிசை நியாயமாகவும் நேர்மையாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.