காவேரிப்பட்டினம் அருகே தமிழகத்தில் முதல்முறையாக புதிய வகை பள்ளிப்படை–நடுகல் கண்டறிதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை ஒட்டிய பகுதியில், இதுவரை பதிவாகாத வகையைச் சேர்ந்த பள்ளிப்படை நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்தகுரும்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இந்த தொன்மையான கல் நினைவுச் சின்னம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பு குறித்து கிருஷ்ணகிரி வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதுவரை பள்ளிப்படைக் கோயில்கள் தனித்தனியாகவும், வீர நினைவாக அமைக்கப்பட்ட நடுகற்கள் தனித்தனியாகவுமே காணப்பட்டு வந்ததாக தெரிவித்த ஆய்வாளர்கள், தமிழகத்தில் இரண்டும் ஒரே நினைவுச் சின்னமாக இணைந்து காணப்படும் அமைப்பு இதுவே முதல் முறையாக ஆவணப்படுத்தப்படுவதாகக் கூறினர்.
இந்த கண்டுபிடிப்பு, தமிழகத்தின் தொன்மையான இறப்பு வழிபாடு மற்றும் நினைவுச் சின்ன மரபுகள் குறித்து புதிய ஆய்வு வாய்ப்புகளை உருவாக்கும் முக்கியச் சான்றாகக் கருதப்படுகிறது.