பொங்கல் விழாவில் திமுக ஒன்றிய அவைத்தலைவரை தாக்கியதாக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு – காணொளி சமூக வலைதளங்களில் பரவல்
கும்மிடிப்பூண்டி அருகே நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியின் போது, திமுக ஒன்றிய அவைத்தலைவரை திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தாக்கும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லாபுரம் பகுதியில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பிற திமுக நிர்வாகிகளை அழைக்காமல், திமுக எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனை மட்டும் அழைத்து விழா நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஒன்றிய செயலாளர் சக்திவேலிடம் திமுக ஒன்றிய அவைத்தலைவர் முனிவேல் தனது அதிருப்தியை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்காலத்தில் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் அழைத்தே நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என கூறி, அவரை சமாதானப்படுத்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், எல்லாபுரம் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டியில் திமுக எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்றார். அப்போது, முன்பு ஒன்றிய செயலாளரிடம் புகார் அளித்திருந்த திமுக ஒன்றிய அவைத்தலைவர் முனிவேலை அவர் கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. அந்த சம்பவத்தின் காணொளி தற்போது வெளியாகி, வைரலாகி வருகிறது.
இதற்கிடையில், தன்னை தாக்கியதாக கூறி, திமுக எம்எல்ஏ கோவிந்தராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக ஒன்றிய அவைத்தலைவர் முனிவேல் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.