“பிறந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்கிறோம்” – வீட்டு வாடகை சுமையால் அரசுத் தரிசு நிலத்தில் குடியேறிய மக்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில், வீட்டு வாடகையைச் செலுத்த இயலாத காரணத்தால், பொதுமக்கள் சிலர் அரசு கட்டுப்பாட்டில் உள்ள தரிசு நிலத்தில் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
வில்பட்டி ஊராட்சி எல்லைக்குள் வரும் குருசாமி பள்ளம் கிராமத்தில் பல குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றன. சொந்தமாக வீடு இல்லாததால், அவர்கள் பெரும்பாலும் வாடகை வீடுகளையே நம்பி வாழ்ந்து வந்துள்ளனர்.
ஆனால், வாடகை கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அந்த குடும்பங்கள் இடமாற்றம் செய்து கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், இனி வாடகை செலுத்த இயலாது என தெரிவித்து, குருசாமி பள்ளம் கிராமத்திற்கு அருகிலுள்ள அரசு தரிசு நிலத்தில் 60-க்கும் அதிகமான குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளனர்.
தங்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, அரசு இப்பகுதியில் இலவச வீட்டு மனை ஒதுக்கீடு செய்து, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.