கடன் சுமை தாங்க முடியாமல் முதிய பெண் எடுத்த துயர முடிவு
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத சூழ்நிலை காரணமாக ஒரு முதிய பெண் விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பஞ்சம்மாள் என்பவரின் மகன் ரஞ்சித், தனியார் நிதி நிறுவனத்திலிருந்து ரூ.25 லட்சம் ரொக்கமாக கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
கடன் தவணைகளை முறையாக செலுத்த முடியாத நிலையில், அந்த நிதி நிறுவன ஊழியர்கள் அவரது வீட்டின் முன்பு நோட்டீஸ் ஒட்டி, தொகையை அடைக்காவிட்டால் வீடு கைப்பற்றப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நிதி நிறுவன ஊழியர்கள் ரஞ்சித்தின் குடும்பத்தினரிடம் அவமரியாதையாக நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், ரஞ்சித் வெளியூரில் இருந்த சமயத்தில், மனஅழுத்தத்தில் இருந்த பஞ்சம்மாள் தனது பேத்திக்கும் விஷம் கொடுத்து, பின்னர் தானும் அருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பஞ்சம்மாள், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்தார். அந்தச் சிறுமிக்கு தொடர்ந்து மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, நிதி நிறுவனத்தைச் சேர்ந்த மாயாண்டி, கண்ணன், கார்த்திக், சேது ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.