திருப்பூர் புறநகர் பகுதியில் 13 வயது சிறுவன் சமூக ஊடகத்தின் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக புகார்
திருப்பூர் அருகிலுள்ள கொடுவாய் பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுவன், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை பயன்படுத்தி பலரிடமிருந்து பெரும் தொகை பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்த சிறுவன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தொடர்ந்து பல்வேறு வீடியோக்களை பதிவேற்றி, அதிகமான பின்தொடர்பவர்களை பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் கிடைத்த பிரபலத்தைக் கொண்டு, வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், தன்னிடம் முதலீடு செய்தால் கொடுத்த பணத்தை இரட்டிப்பாக திருப்பி வழங்குவதாகவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தனது பெற்றோர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை தேவைப்படுவதாக கூறி, இன்ஸ்டாகிராம் வாயிலாக பண உதவி கோரியதாகவும் கூறப்படுகிறது. இதனை நம்பி பலர் அந்த சிறுவனுக்கு பணம் அனுப்பியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பெற்ற தொகையை மீண்டும் திருப்பி வழங்கவில்லை என்றும், அந்த பணத்தை பயன்படுத்தி அவர் ஒரு கார் வாங்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.