27 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணை அடையும் திருச்சிலைகள்!
சோழர் காலத்தைச் சேர்ந்த பாசியம்மன் சிலைகள் மீண்டும் ஊருக்கு வருவதால் பாசிப்பட்டினம் மக்கள் உணர்ச்சி பெருக்கம்
ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை அருகிலுள்ள பாசிப்பட்டினம் பகுதியில் இருந்து மர்ம நபர்களால் திருடப்பட்ட சோழர் காலத்து பழமையான திருச்சிலைகள், நீதிமன்றத்தின் உத்தரவின்படி மீண்டும் அவற்றின் மூல இடத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இப்பகுதியில் அமைந்துள்ள பாசியம்மன் கோயிலில் இருந்த தொன்மையான மூர்த்தி சிலைகள், சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டன. பின்னர் அவற்றை மீட்ட அதிகாரிகள், வட்டாட்சியர் அலுவலகத்தின் கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
தற்போது, இந்தச் சிலைகளை மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், வரும் 7ஆம் தேதி அவை ஊருக்குள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை முன்னிட்டு, திருச்சிலைகள் கொண்டு வரப்படும் நாளில் உரிய காவல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என பாசிப்பட்டினம் கிராம மக்கள் தங்களது பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.