கோயில்களின் புனிதத்தையும் பாதுகாப்பையும் புறக்கணிக்கும் தமிழக அரசு – இந்து முன்னணி கண்டனம்
தமிழகத்தில் உள்ள கோயில்களின் புனிதத்தையும் பாதுகாப்பையும் மாநில அரசு முறையாக கவனிக்கவில்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாக பல கோயில்களில் மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து, தெய்வச் சிலைகளை சேதப்படுத்தும் சம்பவங்கள் எண்ணற்ற முறைகள் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு நடைபெறும் சம்பவங்களில் குற்றவாளிகளை கைது செய்தாலும், அவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறி காவல்துறையினர் வழக்குகளை முடித்துவிடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
காவல்துறையின் இந்த அலட்சியம் அபூர்வமானது அல்ல; வழக்கமாக நடைபெறும் செயலாக மாறிவிட்டதாகவும், சமீபத்தில் சிதம்பரம் கோயிலில் நடந்த சம்பவமே அதற்கு தெளிவான உதாரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், காவல்துறை திட்டமிட்டு அலட்சியமாக செயல்படுகிறதா? அல்லது ஏதேனும் காரணங்களால் குற்றவாளிகளை தப்பவிடுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோயில்களில் நடைபெறும் இத்தகைய அத்துமீறல்கள் பக்தர்களின் மனங்களில் கடும் வேதனையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக தெரிவித்த அவர்,
கோயில்களில் சட்டவிரோதமாக நுழைந்து அக்கிரமங்களில் ஈடுபடுவோர் மற்றும் தெய்வச் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது தமிழக அரசும், காவல்துறையும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.