கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் – அமமுக பொதுக்குழு தீர்மானம்
கூட்டணி அமைப்பது தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கி, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் நடைபெற்ற அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு தனிப்பட்ட முறையில் சாதி வாரியான கணக்கெடுப்பை திமுக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், அதன் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்றும் பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான, உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதையும் தீர்மானமாக அமமுக நிறைவேற்றியுள்ளது.
இதனுடன், அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை மீண்டும் தேர்வு செய்து, அதற்கான சிறப்பு தீர்மானமும் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.