திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்ற பாஜக பொங்கல் விழா – அமித்ஷா பங்கேற்பு
திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள ராணுவ மைதானத்தில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரமாண்டமாக பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
“நம்ம ஊரு மோடி” என்ற பெயரில் நடைபெற்ற இந்த பொங்கல் நிகழ்ச்சியில், அமித்ஷாவுக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பாரம்பரிய ஒயிலாட்டம், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் மூலம் கலைஞர்கள் விழாவுக்கு சிறப்பு சேர்த்தனர்.
விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த பொங்கல் பானையில் அமித்ஷா பொங்கல் வைத்து, பாரம்பரிய முறையில் சிறப்பு பூஜை மேற்கொண்டார்.
இதற்கு முன்பாக, மத்திய அமைச்சர் அமித்ஷா திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலும், ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலும் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் மற்றும் எல்.முருகன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
கோயில்களில் தரிசனம் மேற்கொண்ட போது, அங்கு திரண்டிருந்த பொதுமக்களுடன் அமித்ஷா கை குலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.