கிட்னி கடத்தல் வழக்கு – தலைமறைவான திமுக முன்னாள் அமைச்சரின் மருமகனை வலைவீசி தேடும் மகாராஷ்டிரா காவல்துறை!
கிட்னி கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் திமுக முன்னாள் அமைச்சரின் மருமகன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பிடிக்க மகாராஷ்டிரா காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிப்பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி கடத்தல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவத்தில் பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக பொறுப்பேற்றதன் காரணமாக, விசாரணை மந்தமடைந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஒரு கும்பல் மகாராஷ்டிரா மாநில விவசாயிகளிடமும் சட்டவிரோதமாக கிட்னி கடத்தலில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு திருச்சியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சட்டத்திற்கு புறம்பாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த கிட்னி கடத்தல் விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செல்வராஜின் மருமகன் ராஜரத்தினத்துக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் அடிப்படையில், மகாராஷ்டிரா காவல்துறையினர் திருச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவாக உள்ள ராஜரத்தினத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.