தேர்தல் லாபத்திற்காக வியாபாரிகளை தவறாக வழிநடத்தும் திமுக – பாஜக குற்றச்சாட்டு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி கிரிவலப்பாதையில் சாலையோரத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளை மீண்டும் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, பழனி தேவஸ்தான அலுவலகத்தை திமுகவினர் முற்றுகையிட முயன்றனர்.
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, பழனி முருகன் கோயிலை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் இருந்த சாலையோர கடைகளை தேவஸ்தான நிர்வாகம் சமீபத்தில் அகற்றியது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வியாபாரிகளுக்கு ஆதரவாக தேவஸ்தான அலுவலகம் முன்பு திமுகவினர் திரண்டனர். ஆனால் இந்த பிரச்னை கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், இதுவரை எந்த தீர்வையும் வழங்காத திமுக, தற்போது தேர்தலை முன்னிட்டு வியாபாரிகளை தவறாக வழிநடத்தி அரசியல் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாக பாஜகவினர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர்.