பாலமேட்டில் ஜல்லிக்கட்டு – முன்னேற்பாடுகள் தீவிரம்!
பாலமேட்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரியமாக கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டும் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டு பணிகள் விழா குழு சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மஞ்சமலை ஆற்றின் அருகே உள்ள வாடிவாசல் பகுதி ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், பார்வையாளர்கள் அமர்வதற்கான இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு பணியாற்றி வருகின்றனர்