புதுச்சேரியில் திமுக–காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் – மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேச்சு
புதுச்சேரியில் திமுக–காங்கிரஸ் கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள், இந்தத் தேர்தலில் டெபாசிட் தொகையைக் கூட திரும்பப் பெற முடியாத நிலை உருவாகும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதியாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கடுமையாக கேள்விக்குறியாக உள்ளதாகவும், திமுக வாரிசு அரசியலுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் விமர்சனம் செய்தார்.
மேலும், திமுக வட இந்தியா – தென்னிந்தியா என பிரித்து அரசியல் செய்து மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறது என்றும் குற்றம்சாட்டினார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் வெற்றியைப் பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு, தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறினார்.
மேலும், தமிழகத்திற்கு தேவையான நிதி உதவிகளை மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வருவதாகவும், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தவறான பிரசாரம் செய்து வருவதாகவும் குஷ்பு குற்றம் சாட்டினார்.