சேலம் சுகவனேஸ்வரர் கோயில் சொத்து இழப்பு – அறநிலையத்துறையே பொறுப்பு : அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோயிலுக்கு உரிய சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மற்றும் சொத்துகள் கைமாறியதற்கு, இந்து சமய அறநிலையத்துறையும் கோயில் நிர்வாகமும் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என திருத்தொண்டர்கள் சபையின் தலைவர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
1962 ஆம் ஆண்டு, சேலம் தொண்டை மண்டல வேளாளர் அபிவிருத்தி சங்கம் சார்பில், ஐந்து ரோடு பகுதியில் அமைந்துள்ள 5,916 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தின் ஒரு பகுதியை, மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்காக சுகவனேஸ்வரர் கோயிலுக்கு வழங்கும் வகையில் முன்னோர்கள் உயில் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த நிலங்கள் பின்னர் விற்பனை செய்யப்பட்டதாகவும், தற்போது அந்த சங்கத்தின் பெயரில் மதுரையைச் சேர்ந்த சிலர் ஆருத்ரா தரிசனத்திற்குப் பிந்தைய நாளில் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சுகவனேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ஒரு பூஜை நிகழ்வில் திருத்தொண்டர்கள் சபை தலைவர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், சுகவனேஸ்வரர் கோயிலின் சொத்துகள் மட்டுமல்லாமல், பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில் நிலங்கள் மற்றும் வளங்கள் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாகவும் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.