திமுக நிர்வாகியின் ஆதரவுடன் சட்டவிரோத கடைகள் இயங்குவதாக குற்றச்சாட்டு – சென்னையில் பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டம்
சென்னையில் திமுக நிர்வாகியின் ஆதரவுடன் அனுமதியின்றி கடைகள் செயல்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பச்சையம்மன் கோயிலுக்கு அருகே, சாலையைக் கைப்பற்றி தற்காலிகமாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதிநிதித்துவம் வகிக்கும் சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் அமைந்துள்ள இந்த பகுதியில், திமுக 63-ஆவது வட்ட செயலாளர் பிரபாகரன் என்பவரின் துணையுடன் இந்த சட்டவிரோத கடைகள் இயங்கி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக, நடைபாதை முழுவதும் மறைக்கப்பட்டு, அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் இடையூறுகளை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை மாநகராட்சியிடம் புகார் அளித்தும், அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், திமுக நிர்வாகிகளையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கண்டித்து, அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 15 நாட்களுக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யப்படாவிட்டால் அந்த தொகுதிக்குள் உதயநிதி ஸ்டாலின் வர அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.