அரையாண்டு விடுமுறை நிறைவடைந்ததால் சென்னை நோக்கி மக்கள் திரும்பல் – சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிவடைந்து, தென் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் சென்னை நோக்கி திரும்பியதைத் தொடர்ந்து, சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பள்ளிகளுக்கு 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை, அதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, சென்னையில் பணிபுரியும் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில், இன்று முதல் பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்குவதால், விடுமுறை முடிந்து மக்கள் குடும்பத்துடன் மீண்டும் சென்னை நோக்கி பயணத்தைத் தொடங்கினர்.
இதன் காரணமாக, சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில், வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம் வரிசையாக நின்றதால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததால், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.