இன்று தமிழகம் வருகை தருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று திருச்சியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, இரண்டு நாள் அரசியல் பயணமாக அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார்.
அந்தமானில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை செல்லவுள்ளார். புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தும் தேர்தல் பிரசார நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கிறார்.
இதனைத் தொடர்ந்து, அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கவுள்ளார். இன்று மாலை 7.30 மணியளவில் நடைபெறும் பாஜக மையக்குழு கூட்டத்திலும் அவர் கலந்துகொள்கிறார்.
இந்தக் கூட்டத்தில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடைபெறும் இந்த மையக்குழு கூட்டம், முக்கிய அரசியல் தீர்மானங்களை உருவாக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக புதுக்கோட்டையில் தற்காலிக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தடையும் அவர், அங்கிருந்து நேரடியாக ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு, திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டு, புதுக்கோட்டையில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் இறக்கி சோதனை நடத்தப்பட்டது.