முழு ஓய்வூதியம் அல்ல; பங்களிப்பு ஓய்வூதியமே அறிவிக்கப்பட்டுள்ளது – எல்.முருகன்
தமிழக அரசு அறிவித்துள்ளது முழுமையான ஓய்வூதியத் திட்டம் அல்ல; அது வெறும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே என மத்திய அமைச்சர் எல்.முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என கூறப்படும் கருத்துக் கணிப்புகள் அடிப்படையற்றவை என்றும், அவை நிஜ நிலவரத்தை பிரதிபலிப்பதில்லை என்றும் தெரிவித்தார்.
மக்கள் தற்போது கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றும், தேர்தல் நடைபெற்றால் திமுகவின் தோல்வி உறுதி; அந்தக் கட்சி அரசியலிலிருந்து வீழ்ச்சி அடையும் என்றும் அவர் கூறினார்.
மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கைக் குழு உண்மைகளை முன்வைப்பதற்காக அல்ல; பொய்யான வாக்குறுதிகளை பரப்புவதற்காகவே உருவாக்கப்பட்டதாகவும் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.
இதற்கு மாறாக, பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் தமிழக மக்களின் நலன், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டவையாக இருக்கும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.