உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான ‘சமுத்திரா பிரதாப்’ கப்பல்
இந்திய கடலோர காவல்படைக்காக முழுமையாக நாட்டிற்குள்ளேயே தயாரிக்கப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலான ‘சமுத்திரா பிரதாப்’ கப்பலை, கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் வைத்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இது தொடர்பாக இந்திய கடலோர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கப்பல் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பொருட்களில் சுமார் 60 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 114.5 மீட்டர் நீளமும், 4,200 டன் எடையும் கொண்ட இந்த கப்பல், ஒரே பயணத்தில் 6,000 கடல் மைல்கள் வரை பயணிக்கக் கூடிய திறன் பெற்றதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இந்த கப்பல், கடல்சார் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதிலும், கடலோர பாதுகாப்பு பணிகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.