உலகளாவிய AI போட்டி : அமெரிக்கக் கட்டுப்பாடுகளை மீறி சிப் தொழில்துறையில் சீனாவின் முன்னேற்றம்
செமிகண்டக்டர் உற்பத்தியில் குறைந்தது 50 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களையே பயன்படுத்த வேண்டும் என்று சீன அரசு சிப் உற்பத்தியாளர்களுக்கு புதிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. அமெரிக்கா விதித்த தொழில்நுட்ப தடைகளை எதிர்கொள்ளவும், உள்நாட்டு செமிகண்டக்டர் துறையை வலுப்படுத்தவும், வெளிநாட்டு தொழில்நுட்ப சார்பை குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியை அமெரிக்கா அச்சத்துடன் பார்க்கிறது என்பதே இதன் பின்னணி என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர். இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற உடனேயே டொனால்டு ட்ரம்ப், சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போரை தீவிரப்படுத்தினார். இதன் ஒரு பகுதியாக, சீனாவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
குறிப்பாக, செமிகண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் சீனாவின் முன்னேற்றத்தை முடக்க அமெரிக்கா பல்வேறு தடைகளை உருவாக்கியது. ஆனால், இந்த அழுத்தங்கள் அதிகரித்த அளவுக்கு சீனாவும் அதே வேகத்தில் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி, அமெரிக்க ஆதிக்கத்திற்கு சவால் விடும் நிலையை எட்டியுள்ளது.
இதன் ஒரு முக்கிய அடையாளமாக, 2024 மே மாதத்தில் சீன அரசு, செமிகண்டக்டர் துறையின் வளர்ச்சிக்காக சுமார் 47 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக ஒதுக்கியது. இந்த நிதி, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கும், வெளிநாட்டு தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதை குறைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
மெமரி சிப்கள், வேஃபர் ஃபவுண்ட்ரிகள், சிப் உற்பத்தி இயந்திரங்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் சீனா தற்போது பெருமளவில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில், சீனாவில் செமிகண்டக்டர் உற்பத்தி இயந்திரங்களுக்கான உள்நாட்டு தேவை சுமார் 40 மடங்கு அதிகரித்துள்ளது.
உலகளாவிய செமிகண்டக்டர் சந்தையில் தற்போது சீனாவின் பங்கு சுமார் 15 சதவீதமாக உள்ளது. 2022ஆம் ஆண்டில் உலகளாவிய கணினி மெயின் போர்டு உற்பத்தியில் சீனாவின் பங்கு 20 சதவீதத்தை கடந்திருந்த நிலையில், 2032ஆம் ஆண்டுக்குள் அது 86 சதவீதமாக உயரும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், புதிய விரிவாக்கத் திட்டங்களில் ஈடுபடும் சிப் உற்பத்தியாளர்கள், தங்களது உபகரணங்களில் குறைந்தது பாதியை சீனாவில் தயாரிக்கப்பட்டவையாக பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை அரசு விதித்துள்ளது. இந்த உத்தரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும், திட்ட அனுமதிக்கான கொள்முதல் டெண்டர்களின் மூலம் இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னரே, சீன அதிபர் ஜி ஜின்பிங், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை உள்ளடக்கிய முழுமையான உள்நாட்டு செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை உருவாக்கும் தன்னிறைவு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். அதன் ஒரு பகுதியாக, அதிநவீன சிப் உற்பத்தி இயந்திரங்களை உருவாக்கும் பணிகளில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும், அரசுடன் தொடர்புடைய நிறுவனங்கள், சுமார் 850 மில்லியன் யுவான் மதிப்பிலான உள்நாட்டு லித்தோகிராஃபி இயந்திரங்கள் மற்றும் பாகங்களுக்கு 421 ஆர்டர்களை வழங்கியுள்ளன. இது உள்நாட்டு தொழில்நுட்பங்களுக்கு ஏற்பட்டுள்ள அதிகரித்த தேவையை வெளிப்படுத்துகிறது.
சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் சீனாவின் மிகப்பெரிய செமிகண்டக்டர் நிறுவனமான SMIC (Semiconductor Manufacturing International Corporation), 7 நானோமீட்டர் சிப்களை உருவாக்கும் திறன் பெற்றிருந்தாலும், தற்போது பெரும்பாலும் 14nm மற்றும் 28nm சிப்களையே உற்பத்தி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்காவின் வர்த்தகக் கட்டுப்பாடுகளே முக்கிய காரணமாக கூறப்படுகின்றன.
இதே நேரத்தில், சீனாவின் மற்றொரு முக்கிய சிப் உபகரண தயாரிப்பு நிறுவனமான Naura, SMIC நிறுவனத்தின் 7nm உற்பத்தித் தொழில்நுட்பத்தை சோதனை செய்து வருகிறது. 300க்கும் மேற்பட்ட அடுக்குகள் கொண்ட மேம்பட்ட சிப்களுக்குத் தேவையான கருவிகளை Naura வழங்கி வருகிறது.
குறிப்பிடத்தக்க வகையில், 2020–2021 காலகட்டத்தை விட இரட்டிப்புக்கும் அதிகமாக, இந்த ஆண்டு Naura நிறுவனம் 779 காப்புரிமைகளை பதிவு செய்துள்ளது. அதேபோல், AMEC நிறுவனம் 259 காப்புரிமைகளை பதிவு செய்துள்ளது. 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், Naura நிறுவனத்தின் வருவாய் 30 சதவீதமும், AMEC நிறுவனத்தின் வருவாய் 44 சதவீதமும் உயர்ந்துள்ளது.
முன்னதாக முழுமையாக இறக்குமதியை சார்ந்திருந்த சில சிப் உபகரணப் பிரிவுகளில், சீனா தற்போது சுமார் 50 சதவீத தன்னிறைவை எட்டியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புதிய அரசின் உத்தரவுகளால், அதிநவீன செமிகண்டக்டர் தொழில்நுட்பங்களையும் சீனா உள்நாட்டிலேயே உருவாக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அவர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதன் விளைவாக, சீன சந்தையை பெரிதும் நம்பியிருக்கும் உலகளாவிய செமிகண்டக்டர் உபகரண உற்பத்தியாளர்கள் வர்த்தக ரீதியாக பாதிக்கப்படக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.