தாமிரபரணி நதி மீட்புக்கு ஆக்கிரமிப்பும் மாசுபாடும் ஊழலும் பெரும் தடையாக உள்ளன – ராஜேந்திர சிங்
தாமிரபரணி நதியை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் மாசுபாடு மற்றும் நிர்வாக ஊழல்கள் முக்கிய தடைகளாக இருப்பதாக நீர் பாதுகாப்பு நிபுணரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், ஆற்றின் தற்போதைய நிலையை முழுமையாக ஆய்வு செய்து சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, ராஜேந்திர சிங்கை நியமிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவின்படி நெல்லைக்கு வந்த ராஜேந்திர சிங், முதற்கட்டமாக ராமையன்பட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார். அதன் பின்னர், சிந்துபூந்துறை பகுதியில் கழிவுநீர் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கப்படும் இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
ஆய்வுகளை முடித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர சிங், கங்கை நதியுடன் ஒப்பிடும்போது தாமிரபரணி ஒரு சிறியதும் எளிமையானதும் ஆன நதி என்றும், அதிக மழை கிடைக்கும் பகுதியாக இருப்பதால் தாமிரபரணியை மீட்டெடுப்பது கடினமான பணியல்ல என்றும் தெரிவித்தார்.
ஆனால், இந்த நதியை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
மேலும், தாமிரபரணி நதியின் நிலை குறித்து மேற்கொண்டுள்ள தனது விரிவான ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முழுமையான அறிக்கையை, இன்னும் 30 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் ராஜேந்திர சிங் தெரிவித்தார்.