சென்னையில் ஐயப்ப பக்தர்களின் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து – 4 பேர் படுகாயம்
சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் நின்றிருந்த ஐயப்ப பக்தர்களின் கார் மீது அரசு பேருந்து மோதியதில், குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
திருமுல்லைவாயலில் இருந்து ஐயப்ப பக்தர்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல டூரிஸ்ட் வாகனம் ஒன்று வந்துள்ளது. அந்த வாகனத்தை முனுசாமி என்பவர் பூக்களால் அலங்கரித்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தப்பட்டிருந்த டூரிஸ்ட் வாகனம் மீது மோதியது. தொடர்ந்து அருகில் இருந்த மற்றொரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீதும் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஐயப்ப பக்தர் முனுசாமி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்துக்குக் காரணமான அரசு பேருந்து ஓட்டுநர் பன்னீர்செல்வத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.