வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை (அக். 23) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், வரும் 27-ம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பி. அமுதா வெளியிட்ட அறிக்கையில்,
“தென்மேற்கு வங்கக்கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோரத்துக்கு அருகில் நீடித்து வருகிறது. இது நாளை வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து செல்லும் வாய்ப்புள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம் வடமேற்குத் திசையில் நகரும் வாய்ப்பும் உள்ளது. அதேசமயம், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு காற்றுச் சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், தமிழகத்தில் நாளை முதல் 27-ம் தேதி வரை சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மாவட்ட வாரியான மழை வாய்ப்பு
- அக். 23: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை
- அக். 24: கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி
- அக். 26 & 27: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி
சென்னையில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
காற்று வேகம் மற்றும் எச்சரிக்கை
வடதமிழக மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45–65 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் வாய்ப்பு உள்ளது. எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை அளவுகள் (காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரம்)
- புதுச்சேரி காலாப்பட்டு – 25 செ.மீ
- புதுச்சேரி நகரம் – 21 செ.மீ
- பாகூர் (புதுச்சேரி) – 19 செ.மீ
- வானூர், கடலூர் – தலா 18 செ.மீ
- விழுப்புரம், ஊத்துக்கோட்டை, கொத்தவாச்சேரி, வனமாதேவி – தலா 17 செ.மீ
- பத்துக்கண்ணு, திருக்கனூர், குடிதாங்கி – தலா 15 செ.மீ