காவேரிப்பட்டினம் அருகே நில விவகாரம் – மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்; பாஜக நிர்வாகியும் தாக்கப்பட்ட சம்பவம்
காவேரிப்பட்டினம் அருகே நில உரிமை தொடர்பான தகராறில், வயதான பெண்ணை மரத்தில் கட்டி வைத்துக் கொண்டு டிராக்டர் மூலம் நிலத்தை உழவு செய்ததுடன், சம்பவத்தைத் தடுக்க வந்த பாஜக நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேவர்முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த உண்ணாமலை என்ற மூதாட்டி, கணவரை இழந்த நிலையில் தனது இரு மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
உண்ணாமலையின் கணவருக்கு சொந்தமான நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில், உறவினர்களுக்கிடையே நீண்ட நாட்களாக நிலத் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், உண்ணாமலையின் கணவரின் அண்ணன் மகன் குமார் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் சேர்ந்து, மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து விட்டு, அந்த நிலத்தை டிராக்டர் கொண்டு உழவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினரான தருமபுரி மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் அண்ணாமலை என்பவரையும் அவர்கள் கீழே தள்ளி தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உண்ணாமலை மற்றும் அண்ணாமலை ஆகியோர் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளனர். இதனிடையே, இந்த கொடூர சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.