மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டம் – புதுக்கோட்டையில் பலத்த பாதுகாப்பு
புதுக்கோட்டையில் இன்று நடைபெற உள்ள “தமிழகம் தலைநிமிர – தமிழனின் எழுச்சி பயணம்” நிறைவு நாள் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்று வந்த “தமிழகம் தலைநிமிர, தமிழனின் எழுச்சி பயணம்” என்ற அரசியல் பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம், இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
இந்த முக்கிய நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பள்ளத்து வயல் பகுதியில், மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலக வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொதுக்கூட்ட வளாகத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 15-க்கும் அதிகமான எல்இடி திரைகள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பொதுக்கூட்டம் காரணமாக திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.