அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் ரொக்கப் பரிசு – தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் திருநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில், இயற்கையின் ஆதாரமாக விளங்கும் சூரியனை போற்றியும், விவசாயிகளின் உழைப்புக்கு துணை நிற்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தியும், உலக மக்களின் பசியை தீர்க்கும் உழவர்களை பெருமைப்படுத்தியும், குடும்பங்கள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் தலைமுறை தலைமுறையாகக் கொண்டாடப்படும் பாரம்பரியத் திருவிழா தான் பொங்கல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இனிய விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக 2,22,91,710 குடும்பங்கள் பயன் பெறவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் வேட்டிகள் மற்றும் சேலைகள் அனைத்தும் ஏற்கனவே மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளை மேலும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரூ.3,000 ரொக்கப் பரிசாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு வழங்க ரூ.6,936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 ரூபாய் செலவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே ரொக்கப் பரிசு, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் வேட்டி-சேலைகள் அனைத்தும் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படுவதற்கான முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.