தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசு துணைத் தலைவராக நியமித்து பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார் – எல்.முருகன்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது, தமிழகம் முழுவதற்கும் பெருமை அளிக்கும் விஷயம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கில், எம்ஜிஆர் அறக்கட்டளையின் சார்பில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை கௌரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே, எம்ஜிஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் புதிய நீதி கட்சியின் தலைவருமான ஏ.சி. சண்முகம் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் உரையாற்றிய எல்.முருகன், தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவராக உயர்த்தியதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அந்தப் பதவிக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளதாகக் கூறினார்.
மேலும், சி.பி. ராதாகிருஷ்ணன் எதிர்காலத்தில் இன்னும் உயர்ந்த பொறுப்புகளை ஏற்க வேண்டும் என முருகப்பெருமானை வேண்டிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.