“காவல்துறையை நிர்வகிக்க முடியாவிட்டால் மத்திய அரசு பொறுப்பேற்கும்” – அண்ணாமலை
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பரவலை கட்டுப்படுத்தத் தவறியுள்ளதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாக்குப் போக்கு இல்லாமல் நேரடியாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக நிர்வாகத்தையும் காவல்துறையையும் சரிவர கையாள முடியவில்லை என்று முதலமைச்சர் கூறினால், அதனை மத்திய அரசு கவனித்துக் கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்கத் தவறிய நிலையில், அதற்கான பொறுப்பை மத்திய அரசின் மீது சுமத்துவது முறையல்ல என்றும் அண்ணாமலை கூறினார்.
மேலும், இந்திய அரசியல் சட்டம் குறித்த அடிப்படை அறிவை முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாகவும், மாநில எல்லைகளுக்குள் நடைபெறும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பது மாநில அரசின் மற்றும் முதலமைச்சரின் நேரடி பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் உண்மை நிலையை புரிந்துகொள்ளாமல் தனி உலகத்தில் வாழ்ந்து வருவதாகவும், தமிழக மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்குப் பதிலாக, வெறும் அரசியல் கோஷங்களில் மட்டும் கவனம் செலுத்துபவர்களை தவிர, காங்கிரஸ் கட்சியில் மக்களுக்காக பேச யாரும் இல்லை என்றும் அண்ணாமலை விமர்சித்தார்.