திருப்பத்தூர் அருகே சர்ச்சை: குற்றப் பின்னணி கொண்ட நபர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய காவல் அதிகாரி
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களுடன் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் இணைந்து புத்தாண்டு விழாவை கொண்டாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்காயம் காவல் நிலையத்தில் விஜய் என்பவர் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நிம்மியம்பட்டு பேருந்து நிலையம் அருகே வாகன சோதனை பணியில் அவர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில், குற்றச் செயல்களில் தொடர்புடையதாக கூறப்படும் கிருஷ்ணமூர்த்தி, தேவேந்திரன், சதீஷ் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து, நள்ளிரவில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அந்த நபர்கள் காவல் உதவி ஆய்வாளருக்கு கேக் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ, தற்போது இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.