பொங்கல் பரிசுத் திட்டத்தில் கண்துடைப்புச் செயல் – திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
பொங்கல் பரிசுத் தொகுப்பு விஷயத்தில் திமுக அரசு பொறுப்பற்ற நாடக அரசியலில் ஈடுபடுகிறது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமான பாசாங்கு நடவடிக்கைகளை கைவிட்டு, விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்களை வாங்கி, தமிழக மக்களுக்கு ரொக்கத் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இன்னும் வெறும் 13 நாட்களில் பொங்கல் பண்டிகை வரவிருக்கும் நிலையில், தற்போது தான் ₹248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது திமுக அரசு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
₹5,000 பண உதவி வழங்கப்பட வேண்டும் என பொதுமக்களும், மஞ்சள் கிழங்கு, வெல்லம் போன்ற பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என உழவர்களும் எதிர்பார்த்து வரும் சூழலில், மிகக் குறைந்த தொகையை ஒதுக்கி, மக்களின் நம்பிக்கையை சிதைத்து, வழக்கம்போல் ஏமாற்றம் அளித்துள்ளது திமுக அரசு என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் திட்டத்துக்காக, இத்தனை நாட்களாக கரும்பு, பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றை ஏன் முன்கூட்டியே கொள்முதல் செய்யவில்லை? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
கடைசி நேரத்தில் கண்துடைப்புக்காக அவசர அவசரமாக பொருட்கள் வாங்கி, விவசாயிகளையும் பொதுமக்களையும் மீண்டும் ஏமாற்ற திட்டமா? என்றும் அவர் வினவினார்.
ஆட்சி முடிவடையும் தருணத்திலாவது, திமுக அரசு தனது நாடகப் போக்கை நிறுத்தி, உடனடியாக கரும்பு, மஞ்சள், வெல்லம் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்து, ₹5,000 ரொக்கத் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசை முறையாக வழங்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.