திருப்பத்தூர் மழை பாதிப்பு: மூதாட்டி பலி – 16 வீடுகள் சேதம்
வடகிழக்கு பருவமழையால் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து, ஒரு மூதாட்டி உயிரிழந்ததுடன், 4 கால்நடைகள் உயிரிழந்தன; மேலும் 16 வீடுகள் சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத்தின் தாக்கத்தால், தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக இடைவேளையில்லாமல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி, அதிலிருந்து உபரி நீர் பாலாறு வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதேபோல், ஆண்டியப்பனூர் அணையும் முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் வெளியேறி வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாற்றங்கரை கிராமங்களில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத் துறை எச்சரிக்கை அறிவித்துள்ளது.
மாவட்டத்தின் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கி, போக்குவரத்து தடைபட்டது. பல இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்ததால் சாலைப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலை மற்றும் மின்வாரிய துறையினர் விரைவாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் கூறுகையில், நாட்றம்பள்ளி வட்டத்தைச் சேர்ந்த பெரியக்கா (72) என்பவர் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும், 4 கால்நடைகள் உயிரிழந்ததுடன், 16 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் தெரிவித்தனர். வேளாண்மை துறை அதிகாரிகள் பயிர் சேதத்தை கணக்கிடும் பணியில் உள்ளனர்.
மொத்தம் 49 ஏரிகளில் 20 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன; ஆண்டியப்பனூர் அணையில் உபரி நீர் வெளியேறி வருகிறது. நீர்நிலைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் உள்ளன எனவும் தெரிவித்தனர்.