ஆங்கில புத்தாண்டு – மதுரை மீனாட்சியம்மன், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் பெருந்திரள்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடி சாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டு நாளை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதிகாலை அம்மனுக்கும் சுவாமிக்கும் விசேஷ அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றதுடன், பின்னர் இருவரும் அழகிய அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
அதேபோல், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள புகழ்பெற்ற கற்பக விநாயகர் கோயில் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. அங்கு மூலவர் கற்பக விநாயகர் தங்க கவச அலங்காரத்திலும், உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நீண்ட வரிசைகளில் காத்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சேலத்தில் உள்ள ராஜகணபதி கோயில் முன்பாகவும் புத்தாண்டு வழிபாடுகள் களைகட்டின. இரவு நேரத்தில் கோயில் நடை சாத்தப்பட்டிருந்த போதிலும், ராஜகணபதி பக்தர்களுக்கு வெளியில் தெரியும் வகையில் கிரில் கேட் அமைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, நள்ளிரவுக்கு முன்பாக பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
அதேபோல், சேலம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலிலும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கற்பூரம் ஏற்றி புத்தாண்டு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தனர்.