வங்கிக் கடன் மோசடி வழக்கு – தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை
வங்கிக் கடன் மோசடி தொடர்பான வழக்கில், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 4 இயக்குநர்களுக்கு தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த ஆந்திரா வங்கி கிளையில், விதிமுறைகளை மீறி 5 கோடி 76 லட்சம் ரூபாய் அளவிலான கடன் வழங்கப்பட்டு மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வங்கி அதிகாரிகள், தனியார் நிறுவன இயக்குநர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி டி.பி.வடிவேலு முன்னிலையில் நடைபெற்றது.
விசாரணையின் போது, வழக்கில் தொடர்புடைய வங்கி மூத்த மேலாளர், மதிப்பீட்டாளர் மற்றும் ஒரு தனியார் நிறுவன இயக்குநர் உயிரிழந்ததால், அவர்கள்மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, குற்றம் நிரூபிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் 4 இயக்குநர்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதே நேரத்தில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட 3 பேரை குற்றமற்றவர்கள் எனக் கருதி, நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.