மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பாய்ந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்!
இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் அதிவேக சோதனை இயக்கம் முழுமையான வெற்றியுடன் முடிவடைந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா – நாக்டா இடையிலான ரயில்பாதையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கொண்டு வேக சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனை பயணத்தின் போது, ரயில் மணிக்கு 180 கிலோமீட்டர் என்ற உயர் வேகத்தை எளிதாக எட்டிச் சாதனை படைத்துள்ளது.
சோதனை இயக்கத்தின் ஒரு பகுதியாக, ரயிலின் உள்ளே ஜன்னல் அருகே நான்கு கண்ணாடி டம்ளர்களில் நீர் நிரப்பி வைக்கப்பட்டது.
அதில் மூன்று டம்ளர்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, அதன் மேலே மற்றொரு டம்ளர் வைக்கப்பட்டு, ரயிலின் நிலைத்தன்மை மற்றும் அதிர்வுத் தன்மை பரிசோதிக்கப்பட்டது.
அதிர்ச்சியூட்டும் விதமாக, இவ்வளவு வேகத்திலும் டம்ளர்கள் சிறிதும் அசையாமல் இருந்ததுடன், நீரும் ஒரு துளி கூட சிந்தவில்லை.
இந்த அசாதாரண சோதனைக்கான காணொளியை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் மேம்பட்ட தொழில்நுட்பத் தரமும், பயணிகளுக்கு வழங்கப்படவுள்ள மென்மையான, அதிர்வற்ற சொகுசுப் பயண அனுபவமும் உலகிற்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.