செல்வப்பெருந்தகையைச் சுற்றிவளைத்த கிராமவாசிகள் : அடிப்படை வசதிகள் கோரி கடும் எதிர்ப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் அருகே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகையை, கிராம மக்கள் சூழ்ந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தின் கீழ் வரும் கோட்டூர் கிராமத்திற்கு செல்வப்பெருந்தகை நேரில் வந்திருந்த நிலையில், அவரைச் சந்தித்த கிராம மக்கள், தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எதிர்ப்பு அதிகரித்ததை உணர்ந்த செல்வப்பெருந்தகை, உடனடியாக அங்கிருந்து விலகி காரில் புறப்பட முயன்றார். இதையடுத்து, சில பெண்கள் உட்பட கிராம மக்கள் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நிலைமை பரபரப்பாக மாறியதைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் தலையிட்டு மக்களை சமாதானப்படுத்தி கலைத்தனர். பின்னர், செல்வப்பெருந்தகை பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.