தமிழகத்தை வன்முறை நிறைந்த நிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் நான்கரை ஆண்டு சாதனை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வாழ்க்கைத் தேடலுக்காக தமிழகத்தை நாடி வந்தவர்களே அச்சத்தில் வாழும் சூழல் உருவாகும் அளவிற்கு, மாநிலத்தை வன்முறையின் கூடாரமாக மாற்றியதே கடந்த நான்கரை ஆண்டுகளாக உள்ள திமுக ஆட்சியின் மிகப்பெரிய “சாதனை” என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) சமூக வலைதள பதிவில், திருத்தணியில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போதைப்பழக்கத்தில் மூழ்கிய இளைஞர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தின் காயங்கள் இன்னும் ஆறாத நிலையில், கோவையில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த பஜித் கான் மற்றும் அவரது நண்பர் தாக்கியதில் கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் சூரஜ் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயரிய மனிதநேயக் கோட்பாட்டை உலகறியச் செய்த தமிழ் மண்ணில், உழைத்து முன்னேற வேண்டும் என்ற கனவுகளுடன் புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கு வந்து குடியிருக்க, அவர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படுவதும் உயிரிழப்பதும் மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக இனவாத மனப்பாங்கையும் பிரிவினை அரசியலையும் சமூகத்தில் விதைத்த ஆளும் திமுகவே, இத்தகைய வன்முறைச் சம்பவங்களுக்கு அடிப்படை காரணம் என்பதைக் யாராலும் மறுக்க முடியாது என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்ச் சமூகத்தை போதை பழக்கத்தின் வழியாக சீரழித்து, மாநிலத்தின் சமூக கட்டமைப்பை சிதைத்துவிட்டு, தங்கள் குடும்பங்கள் மட்டும் அதிகாரத்தில் நிரந்தரமாக நீடிக்கும் என ஒரு குறிப்பிட்ட கூட்டம் தவறான கணக்குகளை போட்டு வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
வாழ்வாதாரம் தேடி வந்த அப்பாவி மக்களைத் துன்புறுத்தும் அளவிற்கு தமிழகத்தை வன்முறையின் மையமாக மாற்றியதே திமுக அரசின் கடந்த நான்கரை ஆண்டுகளின் சாதனை என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
“இதுவே தமிழகத்தைத் தலைநிமிரச் செய்வதாக தாங்கள் கூறும் ஆட்சியா? இதற்கான விளக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க வேண்டும்” என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.