நாடு முழுவதும் தீபாவளி பட்டாசு விற்பனை ரூ.6 ஆயிரம் கோடி! – சிவகாசி உற்பத்தியாளர்கள் பெருமிதம்
இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பட்டாசு விற்பனை ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கு நடந்துள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டும் பட்டாசு விற்பனை அமோக வெற்றியை பெற்றதால், இந்தாண்டும் உற்பத்தி ஆரம்பம் டிசம்பர் மாதத்திலேயே தொடங்கப்பட்டது. எனினும், வெடி விபத்துகள், சில ஆலைகளுக்கு உற்பத்தி தடை, ஆய்வுத் தாமதம் மற்றும் சிறு ஆலைகளின் வேலைநிறுத்தம் காரணமாக பட்டாசு உற்பத்தி சுமார் 30 சதவீதம் குறைந்தது.
இத்தகைய சூழலிலும், தீபாவளிக்காக 20 புதிய வகை பட்டாசுகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட ரகங்கள் சந்தைக்கு வந்தன. உற்பத்தி தட்டுப்பாடு காரணமாக பேன்சி ரக பட்டாசுகளின் விலை 20 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. இருப்பினும், உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்த அனைத்து பட்டாசுகளும் விற்றுத் தீர்ந்தன.
தமிழகத்தில் கடந்த வாரம் பெய்த தொடர்மழையால் சில்லறை விற்பனை ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தாலும், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டதால் விற்பனை மிகச்சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க (TANPAMA) தலைவர் கணேசன் கூறியதாவது:
“டெல்லி உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியதே இந்த ஆண்டு விற்பனை அதிகரிக்க முக்கிய காரணம். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பில் பட்டாசு விற்பனை நடந்துள்ளது.”