புத்தாண்டு வரவேற்பு – பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தல்!
பொதுமக்கள் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக புத்தாண்டை வரவேற்கும் வகையில், சென்னை மாநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, புத்தாண்டு நாளில் காவல் அதிகாரிகள் உட்பட சுமார் 19,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு துணையாக, 1,500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் பங்கேற்க உள்ளனர்.
புதன்கிழமை இரவு 9 மணி முதல் நகரின் 425 பகுதிகளில் வாகன சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், 30 சாலை பாதுகாப்பு அணிகள் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் கடலுக்குள் செல்வதும், கடலில் குளிப்பதும் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், காவல்துறையின் முன் அனுமதி பெற்ற நிகழ்ச்சிகளையே நடத்த வேண்டும் என்றும், மது அருந்திய நிலையில் வாகனங்களை இயக்க வேண்டாம் என்றும் இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.